
கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் பயணித்த பொழுது உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தூர்பேட்டை-சேலம் சந்திப்பு சாலையில் அவர் சென்ற கார் மற்றொரு கார் மீது உரசியது.
இதனைத் தொடர்ந்து, அன்று நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “கொலை செய்ய சதி பண்ணிவிட்டார்கள். தருமை ஆதீனத்தின் ஆசி தான் என்னைக் காப்பாற்றியது. மீனாட்சி சுந்தரேசர் பெருமாள் தானே என்னைக் காப்பாற்றினார். இல்லையென்றால் இந்த இடத்தில் நான் இருப்பேனா” என பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதுரை ஆதினமும், அவரது ஓட்டுநர் செல்வமும், கொலை செய்ய சதி நடப்பதாகக் குற்றச்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அந்த சம்பவம் விபத்து எனவும், கொலை செய்வதற்கான முயற்சி எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது’ எனக் கூறி அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டனர். தொடர்ந்து, அதிவேகமாக கார் ஓட்டிய புகாரின் மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் செல்வம் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஓட்டுநர் மீது வழக்கா அல்லது அவரை துரத்தியவர்கள் மீது வழக்கா என்று சொல்ல வேண்டும். மதுரை ஆதீனம் தெளிவாக சொல்கிறார் 'என்னை கொஞ்சம் பேர் துரத்துகிறார்கள். அதனால் தான் ஓட்டுநர் வேகமாக ஓட்டினார்' என்று. தமிழக காவல்துறை எப்படி செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பது நமக்குதான் தெரியுமே. காவல்துறையின் சிசிடிவி காட்சி எப்படி இருக்கும் எனவும் தெரியும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்னமாதிரி நடந்து கொண்டிருக்கிறது. சிசிடிவி கேமரா துணைகொண்டு மட்டுமே குற்றங்களை நிரூபிக்க முடியாது. ஆதீனம் சொல்கிறார் 'கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள்' என்று சொல்கிறார். அவர் சில அடையாளங்களையும் சொல்கிறார். முதலில் அதை கண்டுபிடிங்கள்.
அவருக்கு மட்டுமல்ல தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் தமிழக காவல்துறை முதலில் அதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் 'ரஃபேல் விமானத்தை எப்பொழுது பறக்கவிடப் போகிறீர்கள்; என்றைக்கு விளையாட்டாக பறக்க விடப் போகிறீர்கள்' என்று கேட்கிறார். என்னங்க விளையாட்டாக இருக்கா? இந்த நாட்டினுடைய பாதுகாப்பு உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறதா? இது தவறான எண்ணம். இதே ரஃபேலில் நீங்கள் எவ்வளவு கொள்ளை அடிக்க முயற்சி செய்தீர்கள். அவருடைய பேச்சை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டிக்க வேண்டும்; கார்கே கண்டிக்க வேண்டும்; ராகுல் காந்தி கண்டிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும்.
இதுவே பாஜகவினர் ஏதாவது சொல்லியிருந்தால் தமிழக முதல்வர் இங்கிருந்து உத்தரபிரதேசம் வரை எழுதுவார். ஆனால் உங்கள் கூட்டணியைச் சேர்ந்தவர் இந்த நாட்டின் பாதுகாப்பை கேலியும் கிண்டலும் செய்துள்ளார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்ல இருக்கிறார். ஏன் இதை கேட்கிறேன் என்றால் முதல்வர் எப்போதும் தமிழ்நாட்டை பார்க்க மாட்டார் உத்திரபிரதேசத்தில் என்ன நடக்கிறது; மத்திய பிரதேசத்தில் என்ன நடக்கிறது; மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என கேட்பார். உத்திரபிரதேசத்தில் பேசியவருக்கு முதல்வர் பதில் சொல்லட்டும்'' என்றார்.