
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கடந்த (01.05.2025) மாலை சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் சென்ற அவர் மலைக்கிராமமான தாண்டிக்குடியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விஜய் மீண்டும் இன்று (05/05/2025) மதுரை வந்த நிலையில் விஜய்யை நோக்கி ஓடிவந்த ரசிகர் ஒருவரின் தலையில் பாதுகாவலர் துப்பாக்கியை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
'நான் படப்பிடிப்பு வேலைகளுக்கு செல்வதால் யாரும் என்னை பின்தொடர வேண்டாம்' என விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார். திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விஜய் மதுரை திரும்பிய நிலையில் மதுரைவிமான நிலையத்தில் ரசிகர்கள் தொண்டர்கள் என யாரும் அதிமாக வரவில்லை. ஆனால் திடீரென ஒரு நபர் சால்வையுடன் விஜய்யை நெருங்க முயன்றார். அப்பொழுது விஜய்க்கு பின்னால் நின்று கொண்டிருந்த பாதுகாவலர் ஒருவர் திடீரென அவரைக் கண்டவுடன் தாக்குதலுக்கு வந்ததாக நினைத்து துப்பாக்கி எடுத்த அவருடைய தலை மீது வைத்து அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர். தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
விஜய்யை நெருங்கிய அந்த நபரின் பெயர் இன்பராஜ் என்பதும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்தவர் என்ற முறையில் விஜய்க்கு சால்வை அணிவிப்பதற்காக அவர் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.