அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதி தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
அண்மையில் அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழுவை அடுத்து அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது. அந்தப் பொதுக்குழு செல்லும் என எடப்பாடி தரப்பும், செல்லாது என ஓபிஎஸ் தரப்பும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு மேல்முறையீடுகளுக்குப் பின் பொதுக் குழுவானது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ், மகேஷ்வரி தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை எதுவும் நடைபெறாமல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றும் இந்த வழக்கானது விசாரணை நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. முதல்முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டு இருந்தார்.
அதனால் வழக்கு முதல் முறை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு முறை வழக்கு பட்டியலிடப்பட்டது. இருப்பினும் இரண்டு முறையும் விசாரணை நடைபெறாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த முறையும் வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெறும் என ஓபிஎஸ் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.