தூத்துக்குடியில் நிகழ்ந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட துணை நடிகர் ஒருவர் அதன் மூலம் திரைப்படம் ஒன்றை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்பவர் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சடாரென அவரது கழுத்தில் இருந்த 12 பவுன் தங்கச்சங்கலியைப் பறித்துச் சென்றனர். இதேபோல் அதே கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்தாய் என்பவர் ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்ற பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 6 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இப்படி தொடர்ச்சியாக கோவில்பட்டி பகுதியில் நிகழ்ந்த இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் துவக்கினர்.
செயின் பறிப்பு நிகழ்ந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கொள்ளையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் பச்சையன்கோட்டை காந்தி நகரை சேந்த சானபுல்லா என்பதும், இதற்கு அவரது மனைவி ரஷியா, மகன் ஜாபர் துணைபுரிந்தனர் என்பதும் தெரியவந்தது. துணை நடிகரான சனாபுல்லா இப்படி கொள்ளையடித்த பணத்தை வைத்து திரைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் அவர் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எடுத்த படத்தின் பெயர் 'நான் அவன்தான்' என்பது தான் இந்த சம்பவத்தில் ஹைலைட்.