Skip to main content

மடிக்கணினி திட்டத்திலும் மெகா ஊழல் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

students free laptops tn govt dmk party mkstalin

 

15.66 லட்சம் மாணவர்களுக்காக ரூபாய் 1,921 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1921 கோடி ரூபாய் மதிப்பில் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் பிரம்மாண்டமான ஊழலில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ, மாணவியருக்கு 15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்காக எல்காட் நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது. அந்த டெண்டரில் சீன நிறுவனம் ஒன்று பங்கேற்று - அந்நிறுவனத்திடம் இருந்து எப்படியும் மடிக்கணினிகள் வாங்குவதென்ற ஒரே உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ள “ஊழல் திருவிளையாடல்கள்” பேரதிர்ச்சியளிக்கின்றன.

 

மடிக்கணினிகள் வழங்கும் திட்ட டெண்டரில் சீன நிறுவனம் பங்கேற்று மடிக்கணினிகள் குறித்த இரு மாதிரிகளை (Model) அளித்து, அதன் சோதனை அறிக்கையையும் (Test Report) கொடுத்திருந்தது. ஆனால் இரு மாதிரி மடிக்கணினிகளுக்கும் ஒரே விலை என்று கூறியிருக்கிறது. இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில் ஒரு மாடல் மடிக்கணினியின் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்களும், இன்னொரு மாடல் மடிக்கணினியின் செயல்திறனுக்கு 265 மதிப்பெண்களும் என இரு வேறு செயல்திறன் கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, இரு மாடல்களில் ஒன்று தரம் குறைந்தவை என்று கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பது போல் தெரிய வந்தது. ஒரு மாடல், குறைந்த செயல்திறனே உள்ள மடிக்கணினி என்று அந்நிறுவனம் அளித்த டெஸ்ட் அறிக்கையிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு விட்டது. ஆனால் அமைச்சர், தகவல் தொழில்நுட்ப செயலாளர், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எல்லாம் ‘கூட்டணி’ வைத்து சீன நிறுவனத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். விளைவு; குறைந்த செயல்திறன் கொண்ட மாடல் மடிக்கணினியை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்து இதன் மூலம் ஒரு மடிக்கணினிக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகம் கொடுக்கப்பட்டு, அந்த சீன நிறுவனம் அடைந்த சட்டவிரோத லாபம் மட்டும் 469 கோடி ரூபாய் என்று எல்காட் நிறுவனத்தின் எல்லா சாளரங்களிலும் எழுதப்படாத குறையாக, ஊழல் தண்டோரா ஒலி எழுப்புகிறது. 

 

மடிக்கணினி முறைகேடு இத்துடன் நின்றுவிடவில்லை. எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு மடிக்கணினியில் ‘மெமரி 4 ஜி.பி.யிலிருந்து 8 ஜி.பி.யாக’ அதிகரிக்கும் வசதி இருக்க வேண்டும் என்று டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4 ஜி.பி. சேர்க்கப்பட்டால் மாணவ மாணவியர் புதிய மடிக்கணினி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சீன நிறுவனம் வழங்கிய மடிக்கணினியில் இந்த வசதி இல்லை. இதுபற்றி மாணவர்களும், பெற்றோர்களும் பலமுறை புகாரளித்தும் விசாரணை என்ற பெயரில் கண் துடைப்பு நாடகம் நடத்தினார்களே தவிர, அதற்குத் தீர்வு காணவில்லை. அதற்குப் பதில் கூடுதலாக ஒரு லாபத்தையும் அந்த சீனக் கம்பெனிக்கு ஏற்படுத்திக்கொடுக்கவே இந்தப் புகார்களை ‘சுயநலத்துடன்’ பயன்படுத்திக்கொண்டனர். மேற்கண்ட வசதியைப் பெற வேண்டுமானால் புதிதாக ஒரு மதர் போர்டைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த மதர் போர்டின் விலை ரூபாய் 2500 என்றும், மேலும் 392 கோடி ரூபாய் சட்ட விரோத லாபம் அந்த சீனக்கம்பெனிக்கு தாராளமாக அ.தி.மு.க. ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

 

‘மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய அரசு’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தனது அமைச்சரவை சகாவுடன் இணைந்து, 1921 கோடி ரூபாய் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மாபாதக மெகா ஊழல் இது. மொத்த நிதி ஒதுக்கீட்டில் 1465 கோடி ரூபாய் அந்த சீனக் கம்பெனிக்கு தற்போது வழங்கப்பட்டுவிட்டது என்றும், மீதியுள்ள 456 கோடி ரூபாயை, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிய வருகிறது. அப்படி வழங்குவது அரசு கஜானாவில் பகல் கொள்ளை நடத்துவதற்கு இணையானது.

 

எனவே, மாணவ, மாணவியருக்குத் தரமற்ற மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில், இந்த மாபெரும் ஊழலுக்கு வித்திட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக மீதமுள்ள 465 கோடி ரூபாயைச் சீன நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி ‘பிளாக் லிஸ்ட்’ செய்து, தரக்குறைவான மடிக்கணினி வழங்கியதற்காகப் பெருந்தொகையினை அபராதமாக அந்த நிறுவனத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும், பெற்றோரும், மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்