திருச்சி மாவட்டம், தில்லை நகரில் நடைபெற்று வந்த ஹசி பியூட்டி பார்லரில் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து 2021 ஏப்ரல் மாதம் வரை அழகுகலை பயிற்சி எடுக்கப்பட்டுவந்தது. இதனை அந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் ரேஷ்மா ஹசீன் எடுத்துவந்தார். இதில், நத்தவர்வாலி தர்கா பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் அந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். இந்த பியூட்டி பாலரின் உரிமையாளரும் அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், பியூட்டி பார்லர் உரிமையாளர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக கூறி அந்த மாணவி பயிற்சியில் இருந்து நின்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவி குறித்து அவதூறு பேசுவதோடு, மாணவியின் உறவினா்களின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு பல தவறான ஆடியோ பதிவுகளை அனுப்பியுள்ளார். மேலும், அந்த மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடுவதாக மிரட்டுயுள்ளார்.
இதுக்குறித்து அந்த மாணவி கோட்டை காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால், அந்த புகாரை வாங்க மறுத்து கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அனுப்பியுள்ளனா். எனவே அந்த மாணவி டி.ஜி.பிக்கு தன்னுடைய புகார் மற்றும் அனைத்து ஆடியோ பதிவுகளையும் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னா் பிப்ரவரியில் கொடுக்கப்பட்ட புகார் மார்ச் மாதம் 14ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றவாளியை கைது செய்யாமல் அனைத்து மகளிர் காவல்துறையினா் திட்டமிட்டு கடந்த 2 மாத காலமாக அலைக்கழத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணான அந்த மாணவியின் குடும்பம் தற்போது கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுக்குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், “காவல்நிலையத்தில் புகாரை வாங்க மறுத்ததால், நாங்கள் டி.ஜி.பிக்கு அந்த புகாரை அனுப்பினோம். அதனால் காவல் ஆய்வாளா் எங்கள் மீது உள்ள கோபத்தில் கடந்த 3 மாத காலமாக எங்களை அலைகழித்து வருவதோடு, விசாரணைக்காக எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் குற்றம்சாட்டப்பட்ட ரேஷ்மா ஹசீனை மட்டும் 5 முறை அழைத்து பேசியிருக்கிறார்கள். அதையே நாங்கள் இணையதளம் வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டு 6வது முறை நேரில் ஆஜரானோம். குற்றம் செய்தவரை காவல்துறை கைது செய்ய தயாராக இல்லை. எனவே அவரை கைது செய்யும்வரை நாங்கள் காவல்நிலையத்தை விட்டு செல்ல மாட்டோம்” என்றார்.