சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கனகசபை என்கிற சிற்றம்பல மேடையில் வழிபடச் சென்றபோது கோயில் தீட்சிதர்கள் அந்தப் பெண்ணைச் சாதி பெயரைக் கூறி அவரிடம் இழிவாக நடந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் சம்பந்தப்பட்ட தீட்சிதர்களை கைது செய்யவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இதுவரை கைது செய்யாததைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை திராவிடர் கழகம் சார்பில் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், கோவில் தீட்சிதர்களின் ஆணவ அடாவடித்தனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழக கடலூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத்தின் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், பெரியார் திராவிட கழக பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன், விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்டச் செயலாளர் அறவாழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன், மாவட்ட செயலாளர் சித்தார்தன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, தில்லையில் கொட்டடிக்கும் தீட்சிதர்களை கண்டித்தும், காவல்துறை கைது செய்யாததைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.