![Strong winds in Kovalam; Deserted ECR](http://image.nakkheeran.in/cdn/farfuture/6899aa-qk4xrljn6n1Cx9C-EwVVtzT4LpUweTr6wrF8/1732968358/sites/default/files/inline-images/a1657.jpg)
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) மாலை 5.30 மணி நிலவரப்படி புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கோவளம் பகுதியில் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து இன்றி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னையில் மொத்தம் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடக்க இருந்த வங்கி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை சீத்தம்மாள் காலனி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.