திடீரென வீசிய சூரைக் காற்றில் 100 க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், உயர் அழுத்த மின் கோபுரம், 200 க்கும் மேற்பட்ட மரங்கள் உடைந்து சாய்ந்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 கிராமங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், பனங்குளம், மாங்காடு, அணவயல் மற்றும் சுற்றியுள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய் கிழமை மாலை வீசிய சூரைக் காற்றுடன் மழை பெய்தது. இந்த சூரைக் காற்றில் அனைத்து ஊர்களிலும் மா, பலா, தென்னை, தேக்கு, போன்ற பலவகைளான 200 க்கும் மேற்பட்ட மரங்கள் உடைந்து சாய்ந்துள்ளது. மேலும் மரங்கள் உடைந்து சாய்ந்ததால் அருகில் உள்ள மின்கம்பங்களும் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல சேந்தன்குடியில் பழனியப்பன் என்பவரின் வீட்டில் மரம் விழுந்து வீடு சேதமடைந்தது. மேலும் அதே ஊரில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் நிறுத்துமிடம் காற்றில் உடைக்கப்பட்டது. மாங்காடு சாளுவன் குடியிருப்பில் ராஜா என்பவரின் ஓட்டு வீட்டில் அருகில் நின்ற வேம்பு மரக்கிளை உடைந்து விழுந்து ஓடுகள் சேதமடைந்துள்ளது.
சூரைக் காற்றில் மரங்கள் அருகில் உள்ள மின்கம்பங்களில் சாய்ந்ததால் கீரமங்கலம் துணைமின் நிலையத்தின் பராமரிப்பில் உள்ள கீரமங்கலம், செரியலூர் மற்றும் சில கிராமங்களில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்தது. அதே போல கொத்தமங்கலம் துணைமின் நிலையத்தின் பராமரிப்பில் உள்ள கொத்தமங்கலம், மாங்காடு, புள்ளாண்விடுதி, நெடுவாசல், வடகாடு, கறம்பக்காடு, கைகாட்டி, ஆகிய ஊர்களில் 64 மின்கம்பங்களும் காசிம்புதுப்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு சென்ற உயர்அழுத்த மின் கோபுரம் ( அனல் மின்சாரம் செல்லும் கோபுரம் ) உடைந்து சாய்ந்தது. இதனால் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய் கிழமை மாலை முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து உடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்களும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களும் தீவிரமாக உள்ளனர். மேலும் காசிம்புதுப்பேட்டையில் சாய்ந்த மின்சார கோபுரத்தை சீரமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோபுரம் அமைத்து மின்சாரம் செல்ல 2 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதே போல கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதியில் உடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க ஆள் பற்றாக்குறை காரணமாக ஒரு வாரம் வரை காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விரைவில் மின்சாரம் கிடைக்க போர்கால அடிப்படையில் துரிதமாக சீரமைப்பு பணிகள் நடக்க மின்வாரியத்தில் இருந்து கூடுதல் பணியாளர்களை அனுப்பினால் சீரமைப்பு விரைந்து முடிக்கப்படலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் சூரைக்காற்றில் சேதடைந்த வீடுகள், மற்றும் மரங்களுக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.