சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் கடல் வாழ் உயராய்வு மையம் உள்ளது. இங்கு கடல்களில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் கடல்களில் வாழும் அனைத்து உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், உயராய்வு மையத்தில் நுண்ணுயிர்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கடலூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை தாவரவியல் பயிலும் மாணவ மாணவிகள் நேரில் வருகை தந்து ஒவ்வொரு நுண்ணுயிரிகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
அவர்கள் இரண்டு நாட்கள் பரங்கிப்பேட்டை பகுதியைச் சுற்றியுள்ள பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், கடற்கரை வளங்கள், கடற்பாசிகள், நுண்ணுயிர்ப் பாசிகள் வளர்ப்பு முறை உள்ளிட்டவை குறித்து களப்பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுடன் கடலூர் அரசு கலைக் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் முருகையன், கடல் வாழ் உயராய்வு மையம் முதல்வர் (பொறுப்பு) சம்பத்குமார் உள்ளிட்ட உயர் ஆய்வு மைய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நுண்ணுயிர்கள் குறித்தும் கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும் விளக்கி கூறினார்கள்.
இதுகுறித்து உயராய்வு மைய முதல்வர் கூறுகையில், “விடுமுறையில் உள்ள மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளிவரை வேலை நாட்களில் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு நுண்ணுயிர்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். இதனை மாணவர்கள் தற்போதுள்ள விடுமுறைக் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.