காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர்.. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், சுமார் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இந்த போருக்கு நடுவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்த தொடங்கியது. அதற்கு எதிர் தரப்பினரும் தாக்குதல் நடத்த தொடங்கியதால் இது இஸ்ரேல் - லெபனான் இடையேயான போராக மாறியது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்த, இஸ்ரேலும் லெபனானின் மீது பதிலடி தாக்குதல்களை நடத்தியது. லெபனான் மீது தரைவழி தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அண்மையில் அறிவித்த நிலையில், லெபனானின் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவமும், ஹிஸ்புல்லா படைகளும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒருகட்டத்தில், லெபனான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில்.. கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதனால் இஸ்ரேல் மீது கடும் கோபத்துக்குள்ளான ஈரான்.. ஹிஸ்புல்லா படைகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த 1ஆம் தேதியன்று எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ‛அடுத்த 12 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். இதற்கு முழுவீச்சில் ஈரான் தயாராகி வருகிறது. ஈரான் இந்த தாக்குதலை நடத்தும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்'' என எச்சரிக்கை விடுத்தது.
இந்த சூழலில், அமெரிக்கா எச்சரித்தது போலவே.. கடந்த 1ஆம் தேதி இரவு இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல் முன்னெடுத்தது. மொத்தம் 400 ஏவுகணை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த கோர தாண்டவத்தால்.. இஸ்ரேல் ராணுவம் திகைத்து நிற்கின்றது.
ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேலில் உள்ள அபாய ஒலிகள் அலறிக்கொண்டே இருக்கின்றது. ஈரானின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுத்தே தீரும்” என்று தெரிவித்திருந்தார். அதே நேரம், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, எச்சரிக்கையை மீறி நடந்த இந்த தாக்குதலால் அமெரிக்கா ஆவேசம் அடைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவுமாறு அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தேன். இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவாக உள்ளது" என கூறியிருக்கிறார்.
இந்த சூழலில், லெபனான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் தீவிரமாகவும் வலி நிறைந்ததாகவும் இருக்கும்" என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் இருந்த ஈரான் முதல் முறையாக நேரடியாக ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத்தால் 3ம் உலகப்போர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.