Skip to main content

'தப்பிய சென்னை; சிக்கிய திருப்பதி'-முன்னெச்சரிக்கை தீவிரம்

Published on 16/10/2024 | Edited on 16/10/2024
 Escaped Chennai; Trapped Tirupati

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் மிதமான மழைக்கே வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று பெய்த கனமழையால் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவின் திருப்பதி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் அங்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருப்பதி தேவஸ்தானம் மற்றும் அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அவதி ஏற்படுத்தாமல் பக்தர்களை தங்க வைப்பது, அன்னதானம் மூலம் உணவு விநியோகம் செய்வது உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில் மலைச்சரிவு உள்ளிட்ட இடர்கள் ஏற்பட்டால் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயாராக உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் திருமலை திருப்பதி, நெல்லூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.

சார்ந்த செய்திகள்