டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏழை மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் பல முன்னெடுப்புகளை செய்த ரத்தன் டாடாவை பற்றி சிலவற்றைப் பார்ப்போம்.
பிரபல தொழிலதிபர் நவால் டாடாவுக்கு கடந்த 1937ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் தான் ரத்தன் டாடா. தனக்கு ஏழு வயதாக இருக்கும்போதே, தன்னுடைய பெற்றோர் விவகாரத்து பெற்று பிரிந்தனர். இதனால், ரத்தன் டாடாவும், இவரின் 5 வயது சகோதரும் தன்னுடைய பாட்டி லேடி நவஜிபாய் அரவணைப்பில் வளர்ந்துள்ளனர். நியூயார்க் நகரத்தில் உள்ள பள்ளியில் உயர்கல்வி படிப்பை முடித்த இவர், கார்னல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டம் முடித்த பின்பு, ஐ.பி.எம் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போதிலும், அந்த வேலையை உதறிவிட்டு, தன்னுடைய குடும்ப நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், ஆடம்பர வாழ்க்கை வாழ நினைக்காமல், அந்த நிறுவனத்தில் சுண்ணாம்புக்கல் கலவையை மேற்பார்வையிடும் வேலையை செய்துள்ளார். ஜே.ஆர்.டி டாடா ஓய்வு பெற்ற பிறகு, 1991ஆம் ஆண்டில், டாடாவின் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் நிறுவனங்களுக்கு தலைவராக பொறுப்பேற்றார். டாடா குழுமத்தின் இவர் தலைவராக இருந்த காலத்தில், டெட்லி, ஜாகுவார், லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. இது போன்ற இவரது பல சாதனைகள், டாடா குழுமத்தின் லாபத்தை பல மடங்காக்கியது. 1991 முதல் 2012ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போது, பல விஷயங்களை எளிதில் சாத்தியப்படுத்தினார். அக்டோபர் 2016ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2017ஆம் வரை அக்குழுமத்தின் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார்.
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும், ஏழை மக்களை பற்றி சிந்தித்து பல முயற்சிகளை எடுத்துள்ளார். பணக்காரர்கள் மட்டுமே கார்களில் பயணிக்க முடியும் என்று எழுதப்படாத விதிமுறை இருந்த போது, ஏழை மக்கள் குறைந்த செலவில் காரில் பயணிக்க வேண்டும் என்று ரத்தன் டாடா நினைத்துள்ளார். அதன்படி, ஏழை மக்களும் நடுத்தர மக்களும் குறைந்த அளவிலான 1 லட்ச ரூபாய் செலவில் ‘டாடா நானோ கார்’ தயாரித்து வெளியிட்டார். இதன்மூலம், இந்தியாவில் பணக்காரர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர மக்களும் குறைந்த செலவில் கார்களை வாங்கி மகிழ்ச்சியாக பயணிக்கின்றனர்.
பணம் படைத்தவர்கள் மட்டுமே அணிய முடியும் என்றிருந்த பிராண்டட் ஆடைகளை ‘ஜூடியோ’ என்கிற நிறுவனத்தின் மூலம் எளிய மக்களுக்கும் கிடைக்கும் படி செய்த்து டாடா நிறுவனம் தான். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும் உயர்ரக ஆடைகளை அணிவிக்கச் செய்த சாதனை எல்லாம் டாடா நிறுவனத்தாலேயே நிகழ்ந்தது. இது போன்ற சிந்தனைகளும் அதனை செயலாக்கம் செய்வதும் ரத்தன் டாடாவின் தொடர்ச்சியான அடுத்தடுத்த டாடாவின் தலைமைப் பொறுப்பாளர்களும் செய்ய உந்து சக்தியாக திகழ்ந்தவர். மக்களின் நலனை பற்றியே சிந்தித்த ரத்தன் டாடா, ‘டாடா சன்ஸ்’ குழுமத்தின் வருமானத்தில் இருந்து 66 சதவீதத்தை அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டில் சிறந்த குடிமகனுக்காக, ‘பத்ம பூஷண்’ விருது பெற்றார். அதுமட்டுமல்லாமல், பத்ம விபூஷண் விருதையும் பெற்றுள்ளார். வணிக உலகில் பல சாதனை செய்த ரத்தன் டாடா இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்துள்ளார்.
அமெரிக்காவில் ரத்தன் டாடா படித்து கொண்டிருந்த காலத்தில், அங்கு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கிடையில், தன்னை வளர்த்த பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், டாடா இந்தியாவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த நேரத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்த காரணத்தினால், அந்த பெண் இந்தியாவுக்கு வர மறுத்துவிட்டார். இதனால், ரத்தன் டாடாவின் அந்த காதல் தோல்வியில் முடிந்துள்ளது. அதன் பின்பு, பாலிவுட் நடிகை சிமி கேரவால் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால், அந்த காதலும் தோல்வியில் முடிந்துள்ளது. இது போன்று 4 முறை திருமணம் செய்ய திட்டமிட்ட போதும், அத்தனையும் தோல்வியில் முடிந்துள்ளது.
நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மீது அதிக அலாதி கொண்ட ரத்தன் டாடா, இந்தியாவிலேயே முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அதிநவீன செல்லப்பிராணி மருத்துவமனையை மும்பையில் தொடங்கினார். கல்வி, மருத்துவம் என கிராமப்புற வளர்ச்சிக்காக பல முன்னெடுப்புகளை எடுத்த ரத்தன் டாடா, இன்று பல இளைஞர்களின் முன்னோடியாக இருக்கிறார். வயது மூப்பின் காரணமாக அவரது இந்த மறைவு, இளைஞர்கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.