வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (15.10.2024) வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.
முன்னதாக சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகியதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையானது தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்வாங்கி உள்ளது. கனமழை காரணமாக அடுக்குமாடி பகுதியின் தரை உள்வாங்கியுள்ளது.
அதோடு அடுக்குமாடிக் குடியிருப்பின் சுவர்கள் முழுவதும் விரிசல் அடைந்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். அதே சமயம் இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் பல அடுக்குகளைக் கொண்ட உணவகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அந்த பகுதியில் குடியிருப்பு கட்டடம் உள்வாங்கியுள்ளதாகவும் குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சுமார் 150 மீட்டர் தொலைவிற்கு 10 அடி ஆழத்திற்கு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.