கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து கடந்த 11ஆம் தேதி இரவு 07.44 மணியளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. அதோடு ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. சரக்கு இரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட குழு ஒன்று இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், ரயில்வே போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணைன் நடத்தி வருகிறது.
லோகோ பைலட், ஸ்டேசன் மாஸ்டர், டெக்னிக்கல் டீம், சிக்னல் டீம் உள்ளிட்ட 15 ரயில்வே ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றுள்ளது என்றும், ட்ராக் மாறும் இடத்தில் உள்ள நட்டு, போல்டுகள் கழட்டப்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கவரைப்பேட்டையில் 3 நட்டு போல்டுகள், பொன்னேரியில் 6 நட்டு, போல்டுகள் கழட்டப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து, ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.