என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து நேற்று பாமகவினர் என்.எல்.சி முன்பு நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. காவலர்கள் தாக்கப்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்திக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் போராட்டம் காரணமாகவும், முன்னதாகவே பேருந்து மீது கல்வீச்சுகள் நிகழ்ந்ததன் காரணமாகவும் கடலூரில் நேற்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. மாவட்டத்தின் பதற்றமான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரசுப் பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்ததோடு, பேருந்து நடத்துநர் ஆறுமுகமும் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், புவனகிரி போலீசார் பேருந்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.