Skip to main content

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் சர்ச்சை; சேலம் காவல்துறை எஸ்பி, துணை கமிஷனர் அதிரடி டிரான்ஸ்பர்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

 Status Controversial Salem Police SP and Deputy Commissioner both transfer

 

சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை, மாவட்ட எஸ்பி சிவக்குமார் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இரு அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு  உள்ளனர். தமிழக காவல்துறையில் கடந்த சில நாட்களாகவே அதிரடி இடமாற்றங்கள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 4 ஆம் தேதி, காவல்துறையில் ஐஜி, டிஐஜி  அந்தஸ்திலான ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.     

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆக. 5ம் தேதி, எஸ்பி / துணை ஆணையர் அந்தஸ்திலான ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். கிரைம் ரேட் அதிகமாக உள்ள காவல் எல்லைகளில் பணியாற்றி வந்த அதிகாரிகள், புகார்களில் சிக்கியவர்கள், பணியில் கவனக்குறைவாக  இருந்தவர்களும் இந்த இடமாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். காவல்துறையில் இடமாற்றம் என்பது சகஜமானதுதான் என்றாலும், சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார், மாநகர துணை ஆணையர் லாவண்யா ஆகியோரின் இடமாற்றத்திற்கு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் குறித்த சர்ச்சைதான் காரணம் என்கிறார்கள் காவல்துறையினர்.    

 

இது தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் நம்மிடம் கூறியது: சேலம் மாவட்ட காவல்துறை எஸ்பியாக சிவக்குமார், கடந்த ஜனவரி மாதம்தான் பொறுப்பேற்றார். மாநகர காவல்துறையில் தெற்கு சரக துணை ஆணையராக லாவண்யா, கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி பொறுப்பு ஏற்றார். துணை ஆணையர் லாவண்யா, சேலம் மாநகரில் பணியில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே சேலம் மாவட்ட எஸ்பி ஆக இடமாறுதல் பெற, காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் மூலம் முயற்சி செய்து வந்தார்.  இந்த நிலையில்தான், லாவண்யா இடமாறுதல் பெற முயற்சி செய்வது தொடர்பாக ஒரு கருத்தை, கடந்த ஜூலை மாதம் தனது ஸ்டேட்டஸ் ஆக  சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார் வைத்திருந்தார்.  'பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை' என்ற தலைப்புடன் அந்த ஸ்டேட்டஸ் பதிவு இருந்தது. அந்தப் பதிவில், ''சேலம் மாநகரத்தில் திருமதி லாவண்யா என்பவர் காவல் துணை ஆணையராக இருக்கிறார். இவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெற வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வு பெற்ற டிஜிபியிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பெற முயற்சி செய்தார்,'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. எஸ்பி சிவக்குமார் தனது அலுவலக செல்போன் எண்ணிலேயே சக ஐபிஎஸ் பெண் அதிகாரி குறித்த அவதூறான கருத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த விவகாரம், அடுத்த சில வினாடிகளில் காவல்துறை வட்டாரத்தில் காட்டுத்தீ போல பரவியது.  

 

இதுகுறித்து எஸ்பியின் கவனத்திற்கு யாராவது கொண்டு சென்றார்களோ என்னவோ, அடுத்த சில நிமிடங்களில் அந்த சர்ச்சைக்குரிய  வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பதிவை அவர் நீக்கி விட்டார். ஆனாலும் சர்ச்சை மட்டும் அடங்கவில்லை. இதுகுறித்து அப்போது எஸ்பி சிவக்குமாரிடம் கேட்டபோது, 'இது என்னை அறியாமல் நடந்த தவறு. இதற்கு நான் மிகவும் வருத்தம்  தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஆக வைப்பது மிகவும் தவறு. இது தொடர்பாக சேலம்  மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் துணை ஆணையர் லாவண்யா ஆகியோரிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன்” என்று கூறினார். துணை ஆணையர் லாவண்யா, “எஸ்பி சிவக்குமார் எதற்காக அப்படியொரு ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் என்று தெரியவில்லை” என்று  சாதாரணமாக சொல்லி விட்டு கடந்து போனார். ஆனாலும் இந்த விவகாரம் காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் பூதாகரமான சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, டிஜிபி  சங்கர் ஜூவாலிடம் இருந்து, ஸ்டேட்டஸ் வைத்தது தொடர்பாக 15 நாள்களில் உரிய விளக்கம் அளிக்கும்படி சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு ஜூலை 14ம் தேதி ஓர் ஓலை பறந்து வந்தது.    

 

இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம், டிஜிபி அலுவலகத்திற்கு திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிகிறது. அதேநேரம், சேலம் மாநகரில் கடந்த ஜூன், ஜூலையில் அடுத்தடுத்து கொலைகள், திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்தன.  ரவுடிகள் மீது குண்டாஸ் வழக்கு போடுவதில் முனைப்பு காட்டினாலும் கூட குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தொய்வு உள்ளது.  இதனால்தான் எஸ்பி சிவக்குமார், துணை ஆணையர் லாவண்யா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் தூக்கி அடித்திருக்கிறது தமிழக உள்துறை,''  என்கிறார்கள் காவல்துறையினர்.

 

துணை ஆணையர் லாவண்யா, தற்போது சென்னை காவலர் பயிற்சிப்பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்பி சிவக்குமார், சென்னையில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தெரிந்தோ தெரியாமலோ வைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், காவல்துறையின் மாண்பைக் குலைத்திருக்கிறது எனப் புலம்புகிறார்கள் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.   

 

 

 

சார்ந்த செய்திகள்