Skip to main content

சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணிற்கு திமுக சார்பில் நிதியுதவி

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துள்ளான ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், அப்பெண்ணிற்கு செயற்கை கால் பொருத்துவதற்கான பொறுப்பை திமுக ஏற்குமென தெரிவித்துள்ளார்.
 

stalin speech


கடந்த 11 ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியின் பெற்றோரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் திமுக சார்பில் ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் 5 இலட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்து  நிதியுதவி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், கோவையில் கடந்த 11 ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன எனவும், கொடிகம்பம் சாய்ந்து லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், ஆபத்தான கட்டத்தில் ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டார்.


ராஜேஸ்வரியின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், இந்த விபத்து தொடர்பாக லாரி ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்திருந்தாலும், இதற்கு காரணமான அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இச்சம்பத்தை மறைக்க அரசு அதிக முயற்சி எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக அலட்சியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்திருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது எனக்கூறிய அவர், ராஜேஸ்வரியை காப்பாற்ற அரசு முழு பொறுப்பையும், மருத்துவ செலவையும் அரசு ஏற்று கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்ட நிலையில், செயற்கை கால் பொருத்துவதற்கு திமுக பொறுப்பேற்று செய்து தரும் எனவும், கோவை திமுக ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு எல்லா வித உதவியும் செய்து கொண்டிருக்கிறது எனவும் கூறிய அவர்,  ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு திமுக துணை நிற்கும் என தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்