
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.
கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று (10-05-25) மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதிக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீரை நிறுத்தியதில் எந்தவித மாற்றமில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ‘போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானிடம் இருந்தே அழைப்பு வந்தது. போர் நிறுத்தத்திற்கு முன்போ அல்லது பின்போ எந்த நிபந்தனைக்கும் இந்தியா உட்படவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பல், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்ததாலும், அந்த பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா எடுத்தது. அதில் முதன்மையாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதிநீரை திறந்து விடுவதை இந்தியா நிறுத்தியது. பாகிஸ்தானில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருக்கும் சிந்து நதிநீரை, இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மக்கள் பெரிதும் பாதிக்கப்படைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.