கடந்த 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ வில்சன் என்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் 7 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி தெரிவித்திருந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். முன்னதாக 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இருவர் பாலக்காட்டிலும், ஒருவர் திருவனந்தபுரத்திலும் வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று இந்த வழக்கின் பெரிய திருப்பமாக கேரள மாநிலம் தென்மலை பகுதியை சேர்ந்த 4 பேரிடமும் கேரள காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் (அப்துல் சமீர் மற்றும் தவ்ஃபிக்) இரண்டு பேரும் வில்சனை சுட்டு கொன்றதாக விசாரணையில் தெரிய வர, அந்த இருவரில் ஒருவர் தென்மலையில் மாட்டிக் கொண்டதாகவும், அவரை தென்காசியில் உள்ள கியூ பிரான்ச் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நான்கு பேருமே குற்றப்பின்னணி உடைய ஆட்கள் என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. அதன்பிறகுதான் குற்ற பின்னணியில் சம்பந்தப்பட்ட நான்குபேரில் வில்சனை சுட்டுக் கொன்ற இரண்டு பேரில் ஒருவர் மாட்டிக் கொண்டதும், மற்ற மூன்று பேரும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.