திண்டுக்கல் மாநகருக்கு இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வருகை தந்ததையொட்டி மாநகரில் உள்ள பழுதடைந்த சாலைகளை எல்லாம் இரவோடு இரவாக பேன்டேஞ் ஒர்க் பார்த்து நகர் எங்கு பார்த்தாலும் பளபளப்பாக வைத்து விட்டது மாநகராட்சி. அதை கண்டு மக்களே அதிர்ச்சியடைந்ததுடன் மட்டுமல்லாமல் ஆளுநர் மூலம் நகருக்கும் ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது என பூரித்து போய் வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் மதுரைக்கு விமானத்தில் வந்த ஆளுநரை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வரவேற்றார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள பயணிகள் விடுதிக்கு வந்த ஆளுநரை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதன்பின் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர் அங்குள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டும் தன்னுடைய நினைவாக பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நட்டும் பேராசிரியர்களுடன் உரையாடி விட்டு மீண்டும் திண்டுக்கல்லில் உள்ள பயணிகள் இல்லத்தில் ஒய்வு எடுத்து வருகிறார்.
நாளை நகர மக்களிடம் குறைகளையும் கேட்டு மனுக்கள் வாங்க இருக்கிறார். ஆனால் தமிழக ஆளுநர் எங்கு சென்றாலும் கறுப்புக்கொடி காட்டுவோம் என திமுக செயல் தலைவர் கூறி இருப்பதால் திமுகவினரும் நாளை ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க இருக்கிறார்கள். அதையொட்டி நகரிலும் சில மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட காக்கிகள் ஆங்காங்கே முகாம் போட்டு இருப்பதால் நகர மக்கள் மத்தியில் இப்பொழுதே ஒரு பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது.