Skip to main content

“முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Governor R.N. Ravi Heartfelt thanks to Chief Minister M.K. Stalin for organizing the rally”

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வரும் தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால், போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. 

இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் பேரணி நடைபெறும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (10-05-25) சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது. காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை நடைபெற்ற இந்த பேரணியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களானவைகோ, முத்தரசன், செல்வப்பெருந்தகை, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில், ‘பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள். நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்