இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இந்த வருடம் மட்டும் ஸ்பெஷலானது. இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று நினைவுத்தினத்தன்று கட்சியின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த பேருவகை அடைந்துள்ளனர் தேவேந்திரகுலமக்கள்.
கடந்த சிலவருடங்களாக நடைபெற்றதைப் போல், இந்த வருடமும் இமானுவேல் சேகரனின் 62வது நினைவு நாளிற்கு வாடகை வாகனத்தில் வரக்கூடாது, ஜோதி எடுத்து வரக்கூடாது என்று வழக்கம் போல் இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் 144 தடையுத்தரவை அமல்படுத்தியது மாவட்ட காவல்துறை. மாவட்டத்தில் பல இடங்கள் பிரச்சனைக்குரிய பகுதியாகவும், தடைசெய்யப்பட்ட வழித்தடங்களையும் கண்டறியப்பட்டு 200க்கும் அதிகமான இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டும், கூடுதல் ஏ.டி.ஜி.பி.ஜெயந்த் முரளி தலைமையில் ஐ.ஜி, 6 டி.ஐ.ஜி-க்கள் ,18 எஸ்.பி-க்கள் ,18 ஏ.டி.எஸ்.பி-க்கள் ,44 டி.எஸ்.பி-க்கள் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் உள்பட மாவட்டம் முழுமைக்கும் 4500 போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளையில், காலை 8:30 மணி - 9 மணி - அதிமுகவிற்கும், காலை 9மணி - 9: 30 மணி- தேமுதிகவிற்கும், காலை 9:30 மணி - 10 மணி- திமுகவிற்கும், காலை 10 மணி - 10:30 மணி- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், காலை 10:30 மணி - 11மணி - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், காலை 11மணி - 11:30 மணி- பாஜகவிற்கும், காலை 11:30 மணி - 12 மணி அமமுகவிற்கும், பகல் 12மணி - 12:30 மணி - பகுஜன் சமாஜ் கட்சிக்கும், பகல் 12:30 மணி - 1 மணி - மதிமுகவிற்கும், பகல் 2மணி - 2:30 மணி- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும், மாலை 3 மணி - 3:30 மணி-புதிய தமிழகம் கட்சிக்கும் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பதிவு செய்யப்பட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு நேர ஒதுக்கீட்டையும் குறிப்பிட்டது மாவட்ட நிர்வாகம்.
அதிகாலையிலேயே அருகிலுள்ள ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தி துவக்கி வைக்க, அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் நினைவு அஞ்சலி செலுத்த, திமுக சார்பில் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி. சுப.தங்கவேலன். தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், " தியாகி இம்மானுவேல் சேகரனார் தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்டவர். இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர். 1950 விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவர். 1954 ல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர். அவரது புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். அவரது நினைவு நாள் குரு பூஜையை அரசு விழாவாக கொண்டாடுவீர்களா? எனக் கேட்கிறீர்கள். இது ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியில் இருந்து அடுத்து ஆட்சிக்கு வரப் போவது திமுகதான் என உணர்த்தி இருக்கிறீர்கள்." என்றார் அவர்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களது சார்பாக பிரதிநிதிகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் வேளையில், முதன்முறையாக தானே நேரடியாக வந்து இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலினை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் பரமக்குடி மக்கள்.