மரித்துப் போன மூதாதையர்கள், பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் உலகில் ஆவி வடிவில் இருப்பார்கள். அந்த ஆவிகளின் ஆன்மாவைச் சாந்தப்படுத்துவதற்காகவே அவர்களின் உறவினர்கள், பிள்ளைகள் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து அமைதிப்படுத்துவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஐதீகம்.
அமாவாசை நாட்களில் செய்யப்படும் இந்த பிதுர் தர்ப்பணம் தான் முக்கியம். அதுவும், தை மற்றும் ஆடி மாத அமாவாசை தினமே முக்கியத்துவம் பெற்றது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்காக இன்று ஆடி அமாவசை அதிகாலை முதல் மக்களின் கூட்டம் திரளுகிறது.
குறிப்பாக தென்மேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் வனப்பகுதியான சொரிமுத்து அய்யனார் கோவில் மற்றும் குற்றாலத்தின் அருவிக்கரையோரங்களிலும் அதிகாலை முதலே பிதுர் தர்ப்பணம் செய்வதற்காக மக்களின் கூட்டம் நீண்ட வரிசையிலிருக்கிறது. மலையில் தொடரும் மழைகாரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கிருந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு வசதிகளை நெல்லை மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.