மக்களை அச்சுறுத்தும் கிருமிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள கிராமத்து மருத்துவமான சித்த மருத்துவம் கை கொடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவிய நேரத்தில் மற்றவர்களுக்கு பரவாமல் தற்காத்துக் கொள்ள நிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் கட்டுப்படுத்தலாம் என்பதால் இன்று வரை அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல கிராமங்களில் நோய் தொற்று, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள இன்று வரை மொடக்கத்தான், தூதுவளை, போன்ற பலவகை மூலிகை செடிகளை சூப்பாக வைத்து குடித்து வருகிறார்கள். ஆவாரம் பூ சூப்பும் குடித்து நோய் தொற்றில் இருந்து தற்காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் உணவகம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் மூர்த்தி டெங்கு காய்ச்சல் தொடங்கிய காலத்தில் தொடங்கி தற்போது வரை இது போன்ற காலங்களில் நோய் கிருமிகளிடம் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும் வகையில் பல வகையான மூலிகைகளை சூப் வைத்து பேருந்து நிலையம் அருகே மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
தற்போது கரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கிருமி மக்களை தாக்கிவிடக் கூடாது என்ற முயற்சியில் கடந்த சில நாட்களாக மீண்டும் சொந்த செலவில் மூர்த்தி புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சூப் கொடுத்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 500 பேருக்கு வழங்கி வருகிறார். நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துவிட்டாலே கிருமிகள் தொற்றாது அதனால் தான் இந்த சூப்கள் கொடுக்கிறோம் என்கிறார் மூர்த்தி.
ஒவ்வொரு நாளும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாமூண்டி பார்வையிட்டு வருகிறார். இதே போல பல இடங்களிலும் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.