ரசாயனக் கலவை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப் பழங்களை பணத்தாசை பிடித்த வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்து, கேன்சரிலிருந்து மக்களை காப்பாற்றியுள்ளனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.
குறிப்பிட்டக் காலத்தில் தான் வாழைப்பழம் கிடைக்கும் என்கின்ற நிலை இல்லை.! மற்ற பழங்களை போல் விலை அதிகமும் இல்லை.! ஏழைகளுக்கு ஏற்ற பழம் என்கின்ற பலவித நிறைகளைக் கொண்டது முக்கனிகளில் ஒன்றானது வாழைப்பழம் மட்டுமே.! வாழைத்தார்களை அறுவடை செய்து வந்த பிறகு அறைகளில் குவித்து வேப்பிலை மற்றும் தென்னை நார் கொண்டு புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பார்கள். இன்று அறைகளில் அடைக்கப்பட்டு புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பதற்கு முன்பு அன்றைய நாட்களில் மண்குழியில் குவித்து பழுக்க வைப்பது வழமையான ஒன்று. இந்த வகையில் பழம் பழுக்க வைக்க ஏறக்குறைய மூன்று நாட்களாவது ஆகும்.
இந்த நாட்கள் அதிகம்.. அதனை விட லாபம் குறைவு என்பதால் பணத்தாசை பிடித்த வியாபாரிகளோ குறுகிய காலத்தில் கொழுத்த லாபம் சம்பாதிக்க ஆரம்பக் காலக்கட்டங்களில் பழங்களை குவிய வைத்து, மூடிய அறைக்குள் கார்பைட் கல் எனப்படும் ரசாயனக் கல்லை வைத்திருப்பார்கள். இவ்வகையில் பழம் பழுக்க ஒரு நாளாவது ஆகும் என்பதால், தற்பொழுது குறிப்பிட்ட ரசாயனக்கலவையைக் கொண்டு வாழைத்தார்களில் ஊசி போடுகிறார்கள். அந்த ரசாயனக் கலவையின் ஈரம் காயுமுன்பே பழங்கள் பழுத்து சந்தைக்கு விற்பனைக்கு வந்து விடுகின்றது. இந்த வகையில் வரும் பழங்களை உண்பதால் கேன்சர் தொற்று அதிகம் என்கின்றது மருத்துவ ஆய்வு ஒன்று.
இந்நிலையில், இன்று (28/02/2020) சிவகங்கை மாவட்டம் சிவகங்கை டவுன் ஆசாத் தெருவில் உள்ள பழ மண்டியில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமன் பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் செயற்கை முறையில் ரசாயன கலவை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட ரூ.15,000 மதிப்புள்ள வாழைப் பழங்களைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு துறையினர் செய்கையால் சிவகங்கை மக்கள் பெரிதும் மகிழ்ந்து, "தொடர் நடவடிக்கை வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.