தஞ்சாவூரில் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தையை சிலையாக வடிவமைத்து, உடன்பிறந்த தங்கைக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் சகோதரிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார் செல்வம். இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவால் செல்வம் இறந்துவிட்டார். இந்நிலையில் கடைசி மகளான லட்சுமி பிரபாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. தனது சகோதரிகள் இரண்டு பேரின் திருமணத்தை அப்பா முன்னின்று நடத்திய நிலையில், தன்னுடைய திருமணத்தில் அப்பா இல்லையே என தனது சகோதரிகளிடம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் லட்சுமி பிரபா.
உடன்பிறந்த தங்கையின் இந்த மனவருத்தத்தை முழுமையாக சரிசெய்ய முடியாது என்றாலும், நம்மால் முடிந்ததை செய்யலாம் என முடிவெடுத்த லட்சுமி பிரபாவின் சகோதரிகள், 6 லட்சம் ரூபாய் செலவு செய்து சிலிகான் மெட்டிரியலில் தந்தை செல்வத்தின் தத்ரூப சிலையைச் செய்து கொண்டுவந்து மணமேடையில் வைத்து, மணமகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.
அப்பா அருகில் இல்லையே என ஏங்கிய மணப்பெண்ணின் மனக்கவலையைப் போக்கும் விதத்தில், தந்தையின் தத்ரூப சிலை அருகில் தாயையும் நிற்கவைத்து மணமக்கள், மாலை மாற்றி திருமணம் செய்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.