பொள்ளாச்சி அருகே குளத்தைப் பார்வையிட சென்ற பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீசியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு குளம் நிறைந்தது. அந்தக் குளக்கரையில் கிராம பொதுமக்கள் இன்று (22.12.2021) பொங்கல் விழா நடத்தினர். இந்த விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் சட்டபேரவை துணை சபாநாயகரும் தற்போதைய பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை வெளியேறச் சொல்லி அப்பகுதி திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
பின்னர் அங்கு அதிமுக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மோதலைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அதேசமயம், கூட்டத்தில் இருந்த சிலர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்புகள் வீசினர். இதில் கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது செருப்பு விழுந்தது.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமனை கட்சியினரும் போலீசாரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த சம்பவம் கோதவாடி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.