சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழுவுருவ சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (28/05/2022) திறந்து வைத்தார். அதற்கான நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ள நிலையில் முதல்வர் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கலைஞரின் 16 அடி வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், தயாநிதிமாறன், கனிமொழி, ஏ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திமுக தொண்டர்களும் திமுக கொடியுடன் குவிந்திருந்தனர். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டனர். சிலை திறப்புக்கு பின்னர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின், வெங்கையா நாயுடு ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
ரூபாய் 1.70 கோடி மதிப்பில் 16 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, கலைஞரின் வெண்கலச் சிலை 12 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலைக்கு கீழே 'வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.