பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணிய குறைவான வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணிய குறைவான வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களைப் பயன்படுத்தி வருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளைக் கேள்வியாக முன்வைத்த தனியார் ஊடக பெண் செய்தியாளரிடம், முகம் சுளிக்கும் வகையில் சீமான் பதிலளித்திருக்கிறார். செய்தியாளரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்குப் பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.