வேங்கைவயல் வழக்கில், காவல்துறை மீது நம்பிக்கை இழந்த திமுகவின் கூட்டணிக் கட்சியினரே, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது என அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (24.1.2025), குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப் பத்திரிக்கையில், ஒருவரை பழிவாங்குவதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிய வருகிறது. குற்றம் சுமத்தப்பட்ட நபரின் தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட குடும்ப நபர்களே தண்ணீர் அருந்துவார்கள் என்ற நிலையில், இதுபோன்ற குற்றத்தை எந்த மனிதரும் செய்யத் துணியமாட்டார்கள். இந்நிலையில், திமுகவின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அரசின் காவல்துறை, இதுபோன்ற ஒரு குற்றப் பத்திரிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது நம்பும்படியாக இல்லை. எதையோ மூடி மறைக்க, காலம் கடந்த அவசர குற்றப் பத்திரிக்கையாகவே இது கருதப்படுகிறது.
திமுகவின் காவல் துறையை நம்பாத, திமுகவின் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், வேங்கைவயல் வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களது ஆட்சிக் காலத்தில், தமிழகக் காவல்துறை அனைத்து வழக்குகளையும் முழு சுதந்திரத்துடன் விசாரித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தது. ஆனால், இந்த முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகக் காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறிவிட்ட காரணத்தினால் திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு, அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு போன்ற பல வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்தம் கொடுத்தும், இது திமுக அரசின் செவிகளுக்கு எட்டவில்லை.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், வேங்கைவயல் பிரச்சனையில் தமிழகக் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சிபிஐ விசாரணை கோரி உள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள், மக்கள் பிரச்சனையை உணர்ந்து தற்போதாவது குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்நிகழ்விலும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.