பிறந்த நாளிலிருந்து இன்று வரை பால்பவுடரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிற 19 வயதுடைய மாற்றுத் திறனாளி இளைஞனின் நிலையைக் கண்டு பிரபல வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ் நிதியுதவி செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பாக்கியலெட்சுமி, கயல்விழி, கன்னிகா ஆகிய மகள்களும், கலையரசன் (19) கலைவாணன் (17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவருடைய மனைவி தங்கசெல்வி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
மூத்த மகனான கலையரசன் பிறக்கும்போதே கண், மூக்கு மற்றும் உதடுகள் மூடிய படியே பிறந்ததால், அந்த நேரத்தில் தாய்ப்பால் கூட குடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். மகனின் நிலைமையைக் கண்டு வேதனையடைந்த கலையரசனின் தந்தை கண்ணன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார். அதன்பின்னர், பேச ஆரம்பித்து தற்போது கிராம மக்களிடையே அழகாகப் பேசியும் பாட்டுப் பாடியும் வருகிறார்.
இட்லி, தோசை, சாதம் போன்ற உணவுகளை உட்கொள்ளும்படியாக அவருடைய வாய் அமைப்பு இல்லாததால், பிறந்த நாள் முதல் இன்றுவரை பால் பவுடரை மட்டுமே உணவாக உண்டு உயிர்வாழ்ந்து வருகிறார். கலையரசனுக்கு உதவியாக தங்கை கன்னிகா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுக் கவனித்து வருகிறார்.
இதுகுறித்து, கலையரசனின் அக்கா பாக்கியலட்சுமி கூறுகையில், "எங்க அப்பா கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் எங்க குடும்பமே நடக்குது. கரோனாவால் இப்போ வேலை ஏதும் இல்லாம குடும்பத்தை நடத்தவே போதிய வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். கலையரசனுக்கு வயதும் ஆகிவிட்டதால், அதிக பால்பவுடர் தேவைப்படுகிறது. அதை வாங்கக்கூட முடியாத நிலமையாகிடுச்சி. தம்பி கலைவாணன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காய்கறிக் கடையில் வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பால்பவுடர் வாங்கிக் கொடுத்து வருகிறான். தமிழக அரசு எனது தம்பியின் நிலையறிந்து உதவி செய்திட வேண்டும்." என்றார்.
இந்தச் செய்தி, நக்கீரன் இணையதளத்தில் வெளியாகியிருந்த நிலையில், பால்பவுடரை மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்து வருகிற 19 வயதுடைய மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு, பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் நிதியுதவி செய்ததோடு, தனது சகோதரனுக்காகவும், குடும்ப சூழலுக்காகவும் படிப்பை பாதியில் விட்ட கலைவாணனை பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரில் சேர்க்கவும், அவருடைய கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துளளார்.