டெட் தேர்வு எழுதியவர்களுக்கான பணியில் சேரும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்கு ஆசிரியர் பணிக்கு செல்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சூழலில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர்க்கப்பட ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் காலக்கெடு முடிவடைந்தது. ஆனால், இவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கல்வியமைச்சர் செங்கோட்டையன், "2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு முடித்து ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்" என்று தெரிவித்தார்.