சேலத்தில், எதிப்பான் ரசாயனத்தை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சில மாம்பழக் கிடங்குகளில், ரசாயன திரவத்தை தெளித்து மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சிவலிங்கம், புஷ்பராஜ் ஆகியோர் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள ஏடிஎஸ் பழக்கிடங்கு, கேஎஸ்கே பழக்கிடங்குகளில் திடீர் சோதனை நடத்தினர். இவை தவிர மேலும் 3 கடைகளிலும் சோதனை நடந்தது.
இரண்டு கிடங்குகளிலும், மாம்பழங்களை விரைவாக பழுக்க வைப்பதற்காக எதிப்பான் எனும் ரசாயனம் தெளிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு கிடங்குகளில் இருந்தும் 6 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் உரத்தயாரிப்புக் கிடங்கிற்குக் கொண்டு சென்று அழித்தனர். ரசாயன முறையில் செயற்கையாக பழங்களை பழுக்க வைத்த மாம்பழக்கிடங்கு உரிமையாளர்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரசாயனம் மூலம் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவது தெரிந்தால் உணவுப்பாதுகாப்புத்துறை சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், அவ்வாறான பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.