சேலத்தில் பள்ளி மாணவி ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக நபர் ஒருவர் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் சாலையில் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவி மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியை ஒருவர் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாக அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரும்பு வியாபாரியான கோவிந்தசாமி என்பவர் பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது. கோவிந்தசாமியை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விடுமுறை நாட்களில் இரும்பு கடையில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவி வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் மற்றொரு இரும்பு இரும்பு கடையின் உரிமையாளர் கோவிந்தசாமி மாணவியுடன் பழகி அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் குளிர்பானத்தில் மதுவை ஊற்றி கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டதால் பயந்த கோவிந்தசாமி இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்துக் கொண்டு வந்து சாலை ஓரத்தில் விட்டு விட்டு சென்றுள்ளார். தற்பொழுது கைது செய்யப்பட்ட கோவிந்தசாமி மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.