Skip to main content

பள்ளி வாகனம் ஆலமரத்தில் மோதி விபத்து... 11 குழந்தைகள் படுகாயம்...

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

தனியார் பள்ளி வாகனம் ஒன்று ஆலமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணித்த 11 பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள நாகுடி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் தனியார் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பழைய வேன் ஓட்டப்பட்டு வந்துள்ளது.

இன்று (11/02/2020) மாலை பள்ளி முடிந்து 20 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் புறப்பட்டுள்ளது. 5 மாணவர்களை இறக்கிவிட்டு 15 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த போது சீனமங்கலம் கிராமத்தில் பால் வியாபாரி கருப்பையா ( வயது 60 ) என்பவரின் மோட்டார் சைக்கிளில் மோதி நிலை தடுமாறி அருகில் உள்ள ஆலமரத்தில் வேன் மோதியுள்ளது. இதில் வேன் முன்பகுதி முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது.

பலத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது பள்ளி குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டு உடனடியாக பொதுமக்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 2 மாணவிகள் உள்பட 11 மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்துள்ளனர். 

பால் வியாபாரி கருப்பையாவும் பலத்த காயத்துடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாணவர்கள் குணாலன், முகேஷ்வரன், லோகேஷ்வன் உள்பட 4 பேரையும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் வியாபாரி கருப்பையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் காட்டுத் தீயாக பரவியதால் அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளனர். வேன் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதி உள்ளதா என்பது பற்றி அதிகாரிகள் விசாரனையை தொடங்கி உள்ளது. 

அங்கு நின்ற பெற்றோர்கள் கூறும் போது, அறந்தாங்கி பகுதியில் ஓட்டப்படும் பல பள்ளி வாகனங்களுக்கு அரசு எந்தவித அனுமதியும் இல்லை. ஆனால் எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. எப்போதாவது விபத்து ஏற்பட்டால் மட்டுமே விசாரனை நடவடிக்கை என்று பெயருக்கு செய்கிறார்கள். இனிமேலாவது பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்து அனுமதி இல்லாத வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்