ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் நெட் பேங்கிங் ரிவார்டு தொகை காலாவதியாக உள்ளதால் அண்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து பணத்தை டெபாசிட் செய்யுமாறு ஒரு குறுஞ்செய்தி பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இந்த தகவல் மோசடி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பெயரில் பகிரப்படும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பலர் பணத்தை இழந்துள்ளனர். ஏற்கனவே, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் குற்றவாளிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதாகவும், போலியான லிங்குகளை கிளிக் செய்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஓடிபி எண், சிவிவி எண், பாஸ்வேர்டு போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம் என்றும், போன், எஸ்.எம்.எஸ். ஈ-மெயில் மூலமாக இத்தகைய தகவலை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கேட்காது எனவும் அந்த விளக்கத்தில் குறிபிடப்பட்டுள்ளது. எனவே இது போன்ற மோசடியில் சிக்காதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.