Skip to main content

"பெண் குழந்தைகளைப் பெற்றவள் மானத்தோடு வாழக்கூடாது.." - மனைவியை விரட்டிய குடிகாரக் கணவன்!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

‘இத்தனை துன்பப்பட்டு வாழணுமா?’ என்று முடிவெடுத்த சொர்ணலட்சுமி, தனது மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சாத்தூர் ரயில் நிலையம் சென்றாள்.  “ரயில் முன் பாய்ந்து உயிரைவிடுவோம்” என்று அவள் சொன்னதற்கு குழந்தைகள் தலையாட்டினர். ‘இன்னும் சிறிது நேரத்தில் முதல் நடைமேடையில் ரயில் வந்துவரும்’ என்று அந்நிலையத்தின் ஒலிபெருக்கி அலற, சொர்ணலட்சுமியிடம் மூத்தமகள் “பயமா இருக்கும்மா.. நாம ஏன் சாகணும்? பாபநாசத்துல இருக்கிற பிரேமா சித்தி வீட்டுக்கும் போவோம். அவங்களும் நம்மள துரத்தியடிச்சாங்கன்னா.. அப்புறமா சாவோம்.” என்று அழ, தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு, குழந்தைகளோடு அம்பாசமுத்திரம் சென்றாள் சொர்ணலட்சுமி. அங்கும் அவர்களுக்கு நிம்மதி இல்லை. 

 


யார் இந்த சொர்ணலட்சுமி? அவள் வாழ்க்கையில் அப்படியென்ன சோகம்? 


முத்துக்குமார் என்பவரை மணந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று சாத்தூரில் வாழ்ந்து வந்தாள் சொர்ணலட்சுமி. மதுப்பழக்கம் உள்ள முத்துக்குமாரிடம் போதையில் உளறும் நண்பர்கள் “நாங்கள்லாம் ஆம்பள சிங்கத்தைப் பெத்தவங்க. நீ என்னடான்னா மூணும் பொம்பளப் புள்ளயா பெத்துட்டு..” என்று சீண்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு குழந்தை வீதம் பிறந்தநிலையில்,  நான்காவதும் பெண்ணாகப் பிறந்துவிடக்கூடாதென்று, குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வதற்கு ஆயத்தமானாள் சொர்ணலட்சுமி. முத்துக்குமாரோ, நான்காவதாக ஆண் குழந்தை பிறக்கும் எனச்சொல்லி, அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும், 2010-ல் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டாள் சொர்ணலட்சுமி. மூத்தவளுக்கு வயது 14, இரண்டாமவளுக்கு வயது 12, மூன்றாமவளுக்கு வயது 10 என, குடும்ப வாழ்க்கையை நகர்த்தினாள். ஆனால், போதைக் கணவனால் ஒவ்வொரு நாளும் நரக வேதனை தான்.  

 

 

MUTHUKUMAR

 

 

முறுக்கு கம்பெனி தொடங்க வேண்டுமென்று முத்துக்குமார் கேட்டதால், ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடன் வாங்கிக் கொடுத்தாள். அந்தப் பணம் முழுவதையும் நண்பர்களுடன் சேர்ந்து குடித்தே அழித்தான். இதுகுறித்து கேட்டதால், சொர்ணலட்சுமியின் பெற்றோரையும் அடித்தான். அதனால், சொர்ணலட்சுமியின் அம்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர். கணவனுக்குத் தெரியாமல் மருத்துவமனை சென்று தாயைப் பார்த்துவிட்டு வந்த காரணத்தால், போதையின் உச்சத்தில் இருந்த முத்துக்குமார் “உன்னையும் மூணு புள்ளைங்களயும் கொன்னுருவேன். உங்க அம்மா வீட்டுக்குப் போயிரு.” என்று விரட்டிவிட்டான். தாய் வீட்டுக்குச் சென்றால் மீண்டும் பிரச்சனை பண்ணுவான் என்று பயந்த சொர்ணலட்சுமி, தன் குழந்தைகளுடன், ஒரு நாள் முழுவதும் பசி பட்டினியோடு சாத்தூரைச் சுற்றி வந்தாள். இதையறிந்த மேல்மருவத்தூர் வார வழிபாட்டு மன்றம் ஒருநாள் மட்டும் அடைக்கலம் தந்தது. 

 

அங்கிருந்து, சாத்தூர் டவுண் காவல் நிலையம் சென்று முத்துக்குமார் மீது புகார் அளித்தாள் சொர்ணலட்சுமி. காவலர்களும் முத்துக்குமாரை ஒரு தட்டு தட்டி விசாரித்து எச்சரித்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு,  முத்துக்குமாரின் டார்ச்சர் அதிகமானது. அந்த இரண்டு காவலர்களுடன் தவறான உறவு வைத்திருக்கிறாய். அதனால்தான், அவர்கள் என்னை அடித்தார்கள். இனி நீயும் குழந்தைகளும் இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது என்று வீட்டிலிருந்து விரட்டிவிட்டான். சொந்தபந்தம் யார் வீட்டுக்குப் போனாலும், அவர்களுக்கு அவனால் இம்சை என்பதால், சொர்ணலட்சுமிக்கு யார் ஆதரவும் இல்லாமல் போனது. இந்தநிலையில்தான், விரக்தியின் உச்சத்தில் ரயிலில் பாய்ந்து  உயிரைவிடத் துணிந்தாள்.

 


மூத்தமகள் அழுததால், தற்கொலை முடிவைக் கைவிட்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள தங்கை பிரேமா வீட்டுக்குச் சென்றாள். பிரேமாவின் கணவர் விக்னேஷ் பார்வைக் குறைபாடு உள்ளவர். மனைவி அம்பாசமுத்திரத்தில் இருப்பதை அறிந்த முத்துக்குமார், விக்னேஷை தொடர்புகொண்டு, “என் மனைவியை நீ வைத்திருக்கிறாயா?” என்று ஆபாச வார்தைகளால் திட்ட, பதைபதைத்துப் போனார் விக்னேஷின் மனைவி பிரேமா. இனியும் சொர்ணலட்சுமியை  தங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கிவிட, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மூலம்,  அரசு  பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துவிடுவதற்கான  முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

MUTHUKUMAR

 

 


சொர்ணலட்சுமியிடம் பேசினோம். “என் கணவர் படுத்திய கொடுமைகளுக்கு ஒரு அளவே இல்லை. ருசியாக சமைக்கவில்லை என்று திட்டி, சட்டியோடு மீன் குழம்பை என் தலையில் கொட்டிவிட்டார். கண்ணெல்லாம் எரிந்தது.   முகத்தைக் கழுவக்கூடாது என்று சொல்லி விடிய விடிய உட்கார வைத்துவிட்டார். அதனால், கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது.  இப்போதுகூட என்னால் சரியாகப் பார்க்கமுடியாது.  ஒருதடவை, அவருடைய அண்ணன் மாரிச்செல்வத்தை வீட்டுக்கு அழைத்துவந்தார். இருவரும் குடித்தார்கள். பாட்டில் காலியானவுடன், மது வாங்குவதற்கு என் கணவர் டாஸ்மாக் கடைக்குச் சென்றுவிட்டார். அப்போது, அவருடைய அண்ணன் வீட்டைப் பூட்டி என்னை பலாத்காரம் செய்வதற்கு முயன்றார். நான் தப்பித்து வெளியே ஓடினேன். என் கணவர் வந்ததும் நடந்ததைச் சொன்னேன். “மூணும் பொட்ட புள்ளயா பெத்த நீயெல்லாம் மானத்தோடு வாழணுமா? என் அண்ணன்கிட்ட கொஞ்ச நேரம் ஜாலியா இருந்தா குறைஞ்சா போயிருவ?” என்று மிகவும் கேவலமாகப் பேசினார்.  வீட்ல ஆக்கிவச்ச சோறைக் கீழே கொட்டிட்டு, ராத்திரி நேரத்துல ஓட்டலுக்குப் போய் ஏதாச்சும் வாங்கிவரச் சொல்வார். என் கையில் பணம் இருக்காது. எவன்கிட்டயாச்சும் படுத்துச் சம்பாதிச்சு அந்தப் பணத்துல டிபன் வாங்கிட்டு வரச் சொல்வார்.   மானத்தோடு வாழ்வதற்கு முடியாத வீட்டில் இனியும் ஏன் இருக்க வேண்டும் என்றுதான், பெண் பிள்ளைகளின் மானத்துக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, வீட்டை விட்டு வெளியேறினேன்.” என்றார் உடைந்த குரலில். 

 

 

சொர்ணலட்சுமியின் கணவன் முத்துக்குமாரிடம் பேசினோம். “என் அண்ணன் தப்பு பண்ணுனான்னு தெரிஞ்சதும் அவனை செருப்பால அடிச்சேன்.  தண்ணியடிக்கிறத எல்லாம் விட முடியாது. எதுக்கு அவ இன்னொருத்தன் வீட்ல போயி தங்கணும்? அவ ஒரு பிராடு பொம்பள. பொய் பொய்யாத்தான் பேசுவா.” என்று உளறிக்கொட்டினான். புகாரைப் பெற்றுக்கொண்டு முத்துக்குமாரை விசாரித்த சாத்தூர் காக்கிகள் சொர்ணலட்சுமியிடம் “இப்படி ஒரு புருஷன் தேவையா? இவன் கூட வாழறதுக்கு,..?” என்று நொந்துபோய்ச் சொல்லியிருக்கிறார்கள். மனிதனென்னும் போர்வையில், முத்துக்குமார் போன்றவர்கள் மிருகமாய் வாழ்வதற்கு,  அரசு நடத்தும் மதுக்கடையும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது என்று சொன்னால், அது மிகையல்ல!  

 

 

 

சார்ந்த செய்திகள்