Skip to main content

வேல் யாத்திரை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பரப்பியவர் மீது அதிரடி நடவடிக்கை! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Sasikumar arrested in female journalist case

 

பெண் பத்திரிகையாளர் மீது ஆபாசமாக அவதூறு பரப்பிய சசிகுமார் என்பவரை சைபர் க்ரைம் போலீசார் இன்று (02.12.2021) காலை சென்னையில் கைது செய்துள்ளனர். 

 

சமூக வலைதளங்களில் இயங்கிவரும் பெண் ஊடகவியலாளர்கள் மீது ஆபாசமான பதிவுகள் மூலம் தாக்குதல் நடைபெறுவது தொடர் நிகழ்வாக உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பாஜக சார்பில் தமிழ்நாட்டில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் வேல் யாத்திரை நடத்தினார். அதுகுறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சசிகுமார் என்பவர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்பெண் பத்திரிகையாளரின் புகைப்படத்தை அவதூறாகச் சித்தரித்துப் பதிவிட்டிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பத்திரிகையாளர், அந்த நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். 

 

ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், அப்பெண் தொடர்ந்து 14 முறை புகார்கள் கொடுத்திருந்தார். அப்போதும் சசிகுமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காலை சென்னையில் சசிகுமார் சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இதுகுறித்து அப்பெண் பத்திரிகையாளர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘கிஷோர் கே. சாமி போன்ற நபர்களைக் கைது செய்ய பத்தாண்டுகள் ஆனது என்பதும் ஆட்சி மாற்றமும் அதற்குத் தேவையாய் இருந்தது என்பதையும் நாமறிவோம். ஒப்பீட்டளவில் இன்றைய தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை வியப்பில் ஆழ்த்துகிறது. பெண்களை அவதூறு செய்தவர்கள் தப்ப முடியாது என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.

 

இந்த விஷயத்தைக் கையிலெடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கோவையில் இதற்காக காவல்துறையில் தனிப் புகார் அளித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இவ்விஷயத்தை மனித உரிமைகள் தொடர்பான புகாராக பாவித்து தலையிட்ட மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கும், உடன் நின்ற பத்திரிகையாளர்கள், நண்பர்கள், என் தாய், காலஞ்சென்ற என் தந்தை என அனைவரையும் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்