வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு செப்டம்பர் 5- ஆம் தேதி மதியம் திடீரென வருகை தந்தார் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி.
நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது எனக்கேட்டார். அவரிடம் பாதாள சாக்கடை திட்டப்பணி, சாலைகள் சீரமைப்பு பணி, ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பால பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளதாக கூறினர்.
ஆம்பூர் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கான வேலைகளை செய்யுங்கள என்றவர், மழைக்காலம் தொடங்கிவிட்டது குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமையுங்கள் என்றார்.
ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பால பணி ரூபாய் 30 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர், தற்காலிக தீர்வாக மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் நீரை சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள் யாருமில்லாத நிலையில் திடீரென அமைச்சர் ஆய்வு பணியை மேற்கொண்டது எதனால் என விசாரித்தபோது, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவை சேர்ந்த விஸ்வநாதன் மக்கள் பிரச்சனைகள் சிலவற்றில் கவனம் செலுத்துகிறார், இதனால் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கிறது. அதோடு, நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் ஆம்பூர் நகர வாக்குகளும் அதிமுகவுக்கு குறைவாகவே கிடைத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டும், திமுக எம்.எல்.ஏவுக்கு எந்த நிலையிலும் நல்ல பெயர் பெற்றுவிடக்கூடாது என்பதாலே அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார் என்கிறார்கள் திமுக தரப்பை சேர்ந்தவர்கள். அலுவலகத்தில் குறைந்த அளவு அதிகாரிகளே இருந்த நிலையில் திடீரென அமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்துக்கொண்டு தகவல்களை கேட்டது, ஆய்வு செய்தது என்பது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.