தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தண்ணீர்பஞ்சம் ஏற்பட்டாலும் அதற்கு காரணமான மணல் கடத்தலை கடத்தல்காரர்களும் நிறுத்தவில்லை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் தடுக்கவில்லை. மணல் கடத்தல் நடப்பதாக புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர்களை மிரட்டும் சம்பவங்கள் தான் அதிகமாக நடக்கிறது. அதிகாரிகளிடம் கொடுக்கும் மனு மணல் கடத்தல்காரர்களுக்கு உடனே தகவல் கொடுக்கிறார்கள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள்.

இப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. இலுப்பூர் தாலுகா பரம்பூர் அருகில் உள்ள காரசூராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் அப்பகுதி வெள்ளாற்றில் அதிகாரிகள் துணையோடு மணல் கடத்தல் நடக்கிறது பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் நடவடிக்கை எடுங்கள் என்று நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
ஆனால் இன்று அதே சரவணன் என் உயிருக்கு ஆபத்து என்று அவசர மனு அனுப்பியுள்ளார் மணல் கடத்தல் சம்மந்தமாக மனு கொடுத்ததால் கடத்தல்காரர்கள் என்னை மிரட்டுகிறார்கள். என் உயிருக்கும் ஆபத்தாகலாம், அதற்கு கடத்தல்காரர்களுடன் தொடர்பில் உள்ள அதிகாரிகளே காரணம் என்று அனுப்பியுள்ளார். இப்படி மணல் திருட்டால் தண்ணீர் இல்லாமல் போனாலும் தடுக்க நினைத்தால் கொல்ல நினைக்கிறார்கள்.
ஆனால் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் ஒரத்தநாடு தொகுதியில் புதுக்கோட்டை மாவட்ட மணல் கொள்ளையர்கள் வரிசைகட்டி மணலை திருடி ஆற்றை பாலைவனமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொள்ளையர்களுக்கு பின்னால் ஆளுங்கட்சி மாண்புமிகுக்களும் உள்ளனர். அதனால் கடத்தல் லாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளனர்.
15 ஆம் தேதி ஒரத்தநாடு பகுதியில் மணல் கடத்திச் சென்ற ஒரு லாரியை போலீசார் பிடித்து ஓட்டுநரை கைது செய்து லாரி ஓனரான கறம்பக்குடி அருகில் உள்ள மானயவயலைச் சேர்ந்தவரையும் காவல் உக்கார வைத்துவிட்டனர். மானியவயல்காரர் அவருக்கு வேண்டிய அரசியல் பிரமுகரிடம் பேச அவர் மாவட்ட அளவில் உள்ள சீருடை அதிகாரியிடம் பேசி சில நிமிடங்களில் காவல் நிலையத்திற்கு காவல் உயர் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது.
மணல் கொள்ளையை தடுக்க வேண்டியவர்களே இப்படி துணை போனால் தமிழ்நாட்ல தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்குமா? இது தெரிஞ்தோ தெரியாமலோ லட்சம் லட்சமாக வாங்குகிற சம்பளத்தையும் வெளிநாட்டு வேலைகளையும் கூட உதறி தள்ளிவிட்டு உள்ளூரில் குளம் வெட்டுகிறார்கள் நம் இளைஞர்கள். மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் மனசாட்சி இருந்தா சரி தான்.