
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அண்மையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. அக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. தொடர்ந்து திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த 09/03/2025 அன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், ''நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்பட உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஓடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையைப் பெற இது ஒரு தொடக்கம் தான். நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம் மற்றும் முன்னெடுப்பு தொடர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் நம் சார்பில் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்பி அடங்கிய குழு நேரில் சென்று தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன என்பதை நேரில் விளக்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது தனிப்பட்ட ஒரு கட்சியினுடைய பிரச்சனை அல்ல தமிழ்நாட்டினுடைய பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் அனைத்து கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து தேவையான முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் முதல்வரின் அறிவுறுத்தல் படி திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கொண்ட குழு பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ளது. அதன்படி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச சென்றுள்ளனர். ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து இது தொடர்பாக பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல் அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி அப்துல்லா ஆகியோர் நாளை கர்நாடகா மாநிலத்திற்கு சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து எடுத்துச் சொல்ல இருக்கின்றனர். அமைச்சர் கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் மார்ச் 13ஆம் தேதி தெலுங்கானா செல்ல இருக்கின்றனர்.