
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல் படி இன்று தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வடசென்னை பகுதிகளில் மழை பெய்தது. தென் மாவட்டங்கள், காவிரிப் படுகை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் அது தொடரும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்காசி மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கியுள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சமீபத்திய அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 5 சென்டிமீட்டருக்கு குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.
நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நம்பி கோவிலுக்கு செல்லவும் குளிக்கவும் பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பிருக்கும் நிலையில் இருநாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.