
கரூரில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஆம்னி வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியைக் கடத்தியது அவரின் உறவுக்கார இளைஞர் என்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவியை அந்த இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், இருவருடைய புகைப்படங்களையும் இணைத்து சமூகவலைத்தள பக்கத்தில் அந்த இளைஞர் வீடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரை திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கோபத்தில் பேருந்துக்காக காத்திருந்த மாணவியை வலுக்கட்டாயமாக அந்த இளைஞர் ஆம்னி வேனில் கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.