Skip to main content

‘தேசம் vs மாநிலம்’ - என்னவாகும் மாணவர்களின் கல்வி நிலை?

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

same syllabus will be implemented for college students across tamilnadu state

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றும் முன்தினம் (20.7.2022) தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களைச் சந்தித்தார். அப்போது, புதிய  கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவதுடன் ஆராய்ச்சிப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநில பல்கலைக்கழங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாகத் துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

 

அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொதுப் பாடத்திட்டம் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் அமல்படுத்தப்படும். கூடுதலாகக் கொண்டுவரப்படும் புதிய படிப்புகளில் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு 2024 - 2025 ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் அரசு, அரசு உதவி பெறும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் இந்தப் பொதுப் பாடத்திடங்கள் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அவர்களின் ஊதியத்தை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.

 

மாநிலக் கல்விக்கொள்கை குழு தயாராகி வருகிறது. அதுவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், நடைமுறைப்படுத்தப்படும். எல்லாப் பல்கலைக்கழங்களிலும், கல்லூரிகளிலும், பேராசிரியர்களின் தகுதி, ஊதியம், கற்றல் பணியில் இல்லாத  பணியாளர்களுக்கு ஊதியம் சமமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அடுத்த மாதம் பேசவுள்ளோம். ஸ்லெட் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது” என்றார். 

 

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளார். ஆனால் ஆளுநர், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி நிலை என்ன ஆகும் எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்