
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தேர்தலை நடத்த மூன்று நாட்களாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வராததால் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற ஆசிரியர்கள் 28-பேரை அன்னவாசல் போலீசார் கைது செய்தனர்.
இந்த கூட்டுறவு சங்கத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தேர்தலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் சங்களை சேர்ந்தவர்கள் கடந்த 9ந் தேதி 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் மதியம் 1.00 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுஷியா, அன்னவாசல் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் சிதம்பரம் ஆகியோர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
அதன் பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரி வரவில்லை. அன்றே நீதிமன்ற இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் தேர்தலை முறையாக நடத்தலாம் ஆனால் முடிவுகளை மே 3ந் தேதிக்கு பிறகே அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனால் கடந்த 24ந் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
23 மனுக்கள் பரிசீலனை மற்றும் 24-ந் தேதிகளில் வேட்பு மனு வாபஸ் பெற அலுவலகத்தில் காத்திருந்த ஆசிரியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் ஆகியோர் அலுவலகத்திற்கே வராததால் ஆத்திரமடைந்தனர்.
அதனால் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர்..
தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு வரவேண்டும், நீதிமன்றம் சொன்னபடி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவேண்டும், முறைகேடு செய்து ஒருதலைபட்சமாக அறிவிக்கும் நோக்கத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி 23-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கினார்கள். அந்த போராட்டம் 24-ந் தேதி இரவு வரை நீடித்தது. அதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா பேச்சுவார்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.

இதையடுத்து மூன்றாவது நாளாக இன்றும் அதிகாரி வராததால் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் டிஎஸ்பி கோபாலசந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி நேரில் வந்து அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இல்லை என்றனர்.
இதனையடுத்து இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் அழகப்பன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன், ஒன்றிய தலைவர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட 28 பேரை அன்னவாசல் போலீஸ்-இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அன்னவாசல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.