அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.அப்பொழுது கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடந்தது. நடந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து நேற்று மத்திய பாஜக அரசு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்தஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைத்தது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி அடுத்ததாக நடத்தவிருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கான தேதி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்க உள்ள நிலையில் நாளை மறுநாள் செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்துகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் கார்கே வீட்டில் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.