Skip to main content

கொங்கணாபுரம் சந்தை அமர்க்களம்; 3.25 கோடிக்கு ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனை!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

கொங்கணாபுரம் ஞாயிறு சந்தையில் ஒரே நாளில் 3.25 கோடி ரூபாய்க்கு ஆடுகள், கோழிகள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.


சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. இந்த சந்தை ஆடு, கோழிகளுக்கு பிரசித்தி பெற்றது. என்றாலும், காய்கறிகள், இதர மளிகை சாமான்களும் விற்பனைக்கு குவிக்கப்படும். 


இந்த சந்தைக்கு, சேலம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகளை வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். நேற்று (டிச. 15) நடந்த சந்தையில் 7000 ஆடுகள், 1200 பந்தய சேவல்கள், 1800 சாதாரண சேவல்கள், 92 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கொள்முதல் செய்வதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.

salem Market place; 3.25 crore goats, chickens and vegetables sold peoples

இதில், பத்து கிலோ எடையுள்ள ஆடு 4800 ரூபாய் முதல் 5650 ரூபாய் வரையிலும், 20 கிலோ எடையுள்ள ஆடுகள் 9800 ரூபாய் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை ஆனது. 


வளர்ப்புக்கான ஆட்டுக்குட்டிகள் 700 முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. பந்தய சேவல்களுக்கு 900 முதல் 3500 ரூபாய் விலை கிடைத்தது. ஆடுகளை அவற்றின் எடை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பந்தய சேவல்களைப் பொருத்தவரை, அவற்றை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு திறனை சோதனை செய்கின்றனர். அதிக திறன் உள்ள சேவல்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதேநேரம், சாதாரண சேவல்கள் 100 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.


சின்ன வெங்காயம் கிலோ 80 & 110 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ 70 & 100 ரூபாய் வரையிலும் அளவு மற்றும் தரத்தைப் பொருத்து விற்பனை ஆனது. 27 கிலோ கொண்ட தக்காளி கிரேடுகள் 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆடு, கோழிகளுக்கு மட்டுமே பிரசித்தி பெற்ற கொங்கணாபுரம் சந்தையில், நேற்று காய்கறிகளை வாங்கவும் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். நேற்று ஒரே நாளில் 3.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்