சேலத்தில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாநகரில் கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு எஸ்ஐ, மாசிநாயக்கன்பட்டி மேம்பாலத்தின் அடியில் கடந்த பிப். 22ம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது எஸ்ஐயை பார்த்ததும் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்தபோது, மாசிநாயக்கன்பட்டி இ.பி.காலனியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மணிகண்டன் (30) என்பதும், அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
அவர், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, சேலம் மாநகரில் கூலித்தொழிலாளர்களிடம் சில்லரை விலையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன், பொது சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான குற்றத்தில் ஈடுபட்டதால் அவரை, மருந்து சரக்கு குற்றவாளி பிரிவில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தனர். அதையடுத்து, ஆணையரின் உத்தரவின்பேரில் கஞ்சா வியாபாரி மணிகண்டனை திங்கள்கிழமை (மார்ச் 16) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனிடம் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.