சேலம் அருகே, நிதிநிறுவன அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் மரவள்ளி விவசாயிகள் சங்கத்தலைவர் மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கொம்பாடியைச் சேர்ந்த மணி என்கிற கொம்பாடி மணி (45). தனியார் நிதி நிறுவன அதிபரான இவரை, கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி ஒரு கும்பல் காரில் கடத்திச்சென்றது. மணியின் உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல், ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் மணியை விடுவிப்போம். இல்லாவிட்டால் அவரை கொன்று உடலை வீசிவிடுவோம் என்று மிரட்டியது.
இதுகுறித்து தலைவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் கடத்தல் கும்பலை நெருங்கியதை அடுத்து, கடத்தல்காரர்கள் மதுரை மாவட்ட புறநகர் பேருந்து நிலையத்தில் மணியை விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இந்த வழக்கில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ரவுடி நீடூர் விஜி, தன்ராஜ், சக்திவேல், விஜய்கண்ணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ரவுடி வேல்துரை (35) என்பவர்தான். இந்த கடத்தல் சம்பவத்தை முன்னின்று அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே, முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் தண்டனை பெற்று, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர், ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
தலைவாசல் காவல்துறையினர் நிதிநிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் எப்படியும் வேல்துரையை கைது செய்திட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஆத்தூர் அருகே உள்ள மும்முடிக்கு வேல்துரை சென்றிருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
நேற்று (செப். 30) காரில் ஒருவருடன் சென்று கொண்டிருந்தபோது அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், நிதி நிறுவன அதிபர் கடத்தலில் தமிழ்நாடு மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் (53) என்பவர்தான் மூளையாக செயல்பட்டார் என்றும், அவருடைய திட்டத்தின்படியே தானும், கூட்டாளிகளும் செயல்பட்டதாகவும் கூறியுள்ளார் வேல்துரை. அந்த காரில் இருந்த மற்றொரு நபர்தான் கோபாலகிருஷ்ணன் என்பதும் தெரிய வந்ததால் அவரையும் கைது செய்தனர்.
சின்னசேலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்கு முன்பு, அரிசி கடத்தல் வழக்கில் இரண்டுமுறை கைது செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதே சிறையில்தான் வேல்துரையும் ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் ஜாமினில் வெளியே வந்த பிறகும் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி கடலூர் சிறைக்குச்சென்று வேல்துரையை பார்த்து வந்துள்ளார். அதன்பிறகு தண்டனைக்காலம் முடிந்து விடுதலையான வேல்துரையுடன் மேலும் நட்பை நெருக்கமாக்கிக் கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
இருவரும் பணத்தேவைக்காக, பெரும்புள்ளிகளைக் கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படிதான் முதல்கட்டமாக, கொம்பாடி மணியை கடத்தி பணம் பறிக்கலாம் என்று கோபாலகிருஷ்ணன் யோசனை கூறியுள்ளார். அவரை கடத்துவதற்கு முன்பாக தலைவாசல் பகுதியில் வேல்துரையும் கூட்டாளிகளும் கொம்பாடி மணியை ஒரு வாரமாக தொடர்ந்து ரகசியமாக நோட்டமிட்டு வந்துள்ளனர். ஆனால், காவல்துறையினரின் நெருக்குதலால் கொம்பாடி மணியை விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட நீடூர் விஜி, கடத்தல் சம்பவத்தில் வேல்துரை, கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு உள்ள தொடர்பை புட்டு புட்டு வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே காவல்துறையினர் பொறி வைத்து இருவரையும் தூக்கி இருப்பதாக கூறுகின்றனர்.
கோபாலகிருஷ்ணன், அடிக்கடி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விவசாயிகள், பொதுமக்கள் பிரச்னைகளுக்காக கோரிக்கை மனுக்கள் அளிப்பார். பெரிய மனிதர் தோற்றத்தில் வந்து செல்லும் அவரும், கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.